வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய காலக்கெடுவை விரைவில் அறிவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் தொடர்ந்து பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 31-ஆம் தேதி வரைதான் இதற்கு அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய காலக்கெடுவை விரைவில் அறிவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண், வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண்களை இணைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.