வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்கு மத்திய அரசு அறிவித்த 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் மோடி அறிவித்த 500 கோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்த 100 கோடி என மொத்தம் 600 கோடி ரூபாய் கேரளாவுக்கு வழங்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய உணவு வழங்கல் துறை சார்பில் கேரளாவுக்கு 89 ஆயிரத்து 540 மெட்ரிக் டன் அரிசியும் நூறு மெட்ரிக் டன் அளவுக்கு பருப்பு வகைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் 3 லட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களும் 2 லட்சத்து 20 ஆயிரம் ரெகுலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும், கேரளாவுக்கு எரிவாயு சிலிண்டர்களை தனி அங்கீகாரம் இல்லாத வாகனங்களில் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே சார்பில் 24 லட்சம் லிட்டர் குடிநீர் கேரளாவுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் பேரிடரால் சேதமடைந்த செல்போன் டவர்களை சீரமைக்கும் பணிகள் தொலைத்தொடர்புத்துறை சார்பில் 94 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சார்பில் 3 கோடி க்ளோரின் மாத்திரைகளும் 30 டன் பிளீச்சிங் பவுடரும் 1 லட்சத்து 76 ஆயிரம் சேனடரி பேட்களும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் மத்திய நிதித்துறை நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.