வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு தற்போது வழங்கப்படும் 3 மாதம் சிறை தண்டனையை 6 மாதமாக அதிகரிக்க சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. பெற்றோர் மட்டும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007-ன் படி பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3மாத சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தின் படி மகன், மகள்கள், பேரக்குழந்தைகளுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படும்.
இந்நிலையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில், பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் பராமரிப்பு தொகையை உயர்த்துதல் உள்ளிட்டவை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் மருமகன், மருமகள், பேரக்குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் தண்டனை வழங்க இம்மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை கூடிய விரைவில் சட்டமாக மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.