இந்தியா

நெல் உள்ளிட்ட கரீப் பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது மத்திய அரசு

நிவேதா ஜெகராஜா

நெல் உள்ளிட்ட கரீப் பயிர்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

இந்த வருட கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு குவின்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலும் சோளம், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாக்கூர், “விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் வேளாண் பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இன்று காலை நடந்த `2022-23 சந்தைப்படுத்துதல் காலத்திற்கான கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது’ தொடர்பான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஆலோசனை கூட்டத்தில், சில முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. அதன்முடிவில்தான் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், கீழே உள்ள பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிக்கவும் 2022-23 சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியது. அதன்படி ஒரு குவிண்டால் நெல்லின் தற்போதைய விலையான ரூ.1940-லிருந்து ரூ.2040-ஆகவும், “ஏ” கிரேடு நெல் ரகங்கள் விலை ரூ.1960-லிருந்து ரூ.2060-ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ.3,578 ஆகவும், சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,962 ஆகவும், பயத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.7,755 ஆகவும், உளுத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,600 ஆகவும், நிலக்கடலையின் விலை குவிண்டாலுக்கு ரூ.5,850 ஆகவும், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நெல் உள்ளிட்ட முக்கிய பயிர்களின் விலையை உயர்த்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வருடம் நடைபெற்ற கோதுமை கொள்முதல் சென்ற பருவத்தை விட குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடும் கோடை வெப்பம் காரணமாக வட இந்தியாவின் சில பகுதிகளில் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. அத்துடன் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபரதேசம் ஆகிய மாநிலங்களில் தனியார் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அரசு கொள்முதல் குறைந்துள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்தியா கோதுமை ஏற்றுமதி மூலம் கணிசமாக அந்நிய செலாவணி ஈட்டலாம் என கருதப்பட்டது. கொள்முதல் குறைந்ததால் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றம் பருத்தி ஆகிய பயிர்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்பிரமணியம், புது டில்லி.