பெட்ரோல்  Pt web
இந்தியா

எத்தனால் கலப்பு பெட்ரோல்.. இன்ஜின் பாதிக்குமா? மத்திய அரசு விளக்கம்!!

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பால் இன்ஜின் சேதம், காப்பீடு ரத்து போன்ற வதந்திகள் அனைத்தும் பொய்யானவை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

PT WEB

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எத்தனால் கலப்பால் வாகனங்களின் இன்ஜின் பாதிக்கப்படும் என்றும், காப்பீடு செல்லாததாகும் என்று கூறப்படும் தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல்

இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் நடத்திய சோதனைகளில், வாகனங்களின் இயக்கத்திறன் பாதிக்கப்படவில்லை என்பதுடன், வாகனத் தயாரிப்பு மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இதற்கு முழு வாரண்டி மற்றும் காப்பீடு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் அரசு மறுத்துள்ளது. உபரி அரிசி மற்றும் குறைந்த நீர் தேவையுள்ள சோளத்தில் இருந்தே எத்தனால் தயாரிக்கப்படுகிறது என்றும், ஒரு லிட்டருக்கு 3 முதல் 5 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, அதுவும் முழுமையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும் அரசு விளக்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 2014-15ஆம் நிதியாண்டு முதல் இதுவரை 1.9 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது சோதனை எரிபொருள் அல்ல; அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பல தசாப்தங்களாக இத்தகைய எத்தனால் கலப்பு பெட்ரோல் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.