இந்தியா

வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.12,882 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

PT

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்குப் மாநிலங்களுக்கு ரூ.12,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15-வது நிதி ஆணையத்தின் எஞ்சிய காலத்தில் (2022-23 இருந்து 2025-26 வரையில்) வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த, ரூ. 12882.2 கோடியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செலவினங்களுக்கான நிதிக் குழு தனது பரிந்துரையில் வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்திற்கென ரூ.8139.5 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

2022-23 முதல் 2025-26 வரையிலான 15 ஆவது நிதி ஆணையத்தின் எஞ்சிய நான்கு ஆண்டுகளுக்கு “பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன்முயற்சி” என்ற புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 100 சதவீதம் மத்திய அரசின் நிதியிலான இந்த புதிய திட்டத்தை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் அமலாக்கும்.

இந்த நான்காண்டு காலத்திற்கான திட்ட ஒதுக்கீடு ரூ.6600 கோடியாக இருக்கும். 2025-26-க்குள் திட்டங்களை நிறைவு செய்ய முயற்சி மேற்கொண்டிருப்பதால், இதற்குப் பிறகு முடிக்க வேண்டிய பணிகள் இருக்காது. இதற்கான நிதி ஒதுக்கீடு 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் அனுமதிக்கப்படும். செலவினம் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகள் வரை தொடரும். இந்த ஆண்டுக்குள் பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

அடிப்படை கட்டமைப்பு, துணை தொழில்கள், சமூக வளர்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கு “பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன்முயற்சி” என்ற புதிய திட்டம் வழிவகுக்கும். அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனால் பலனடையும்.