நீட் தேர்வுக்காக வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியவில்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 6ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் பலருக்கும் கேரளாவில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ராஜஸ்தானிலும் நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீட் எழுதச்செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ரயில்வே துறை, ‘தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தனியாக சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது. சிறப்பு ரயில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. 5,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களுடன் வரும் பெற்றோர் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக சிறப்பு ரயில் எதையும் ஏற்பாடு செய்ய முடியாது. ஐபிஎல் போட்டிக்காக பூனே சென்ற சிறப்பு ரயிலும் தற்போது வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதால் எந்தக் கூடுதல் ரயிலும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.