ஷோபா கரந்த்லஜே
ஷோபா கரந்த்லஜே  pt
இந்தியா

தமிழர்கள் பற்றிய சர்ச்சை கருத்து... பகிரங்க மன்னிப்பு கேட்ட மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே!

PT WEB

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களே காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்த கருத்து நேற்று பெரும் சர்ச்சையான நிலையில், இதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய பேச்சு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஷோபா கரந்தலஜே,

கிருஷ்ணகிரியில் பயிற்சி பெற்ற பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது . தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் காயமடைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்தை வாபஸ் பெறுவதாகவும்குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,

"பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பொறுப்பற்ற வகையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாஜகவின் இந்த பிளவுவாத போக்கை தமிழர்களும், கன்னடர்களும் ஏற்கமாட்டார்கள். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பாஜகவில் உள்ள அனைவரும் பிரிவினை அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.

இதேபோல் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில்,

“தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜேவுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற பிரிவினைவாத பேச்சுகளை இனியும் யாரும் பேசாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.