இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் விரும்பத்தகாத வகையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட எந்தச் சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக் கொள்ளாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்டு ட்ரம்பை ஆதரிக்கும் வகையில், பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனம் ஒரே நாளில் தனது சந்தை மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், சமூக வலைத்தளங்களில் யோசனைகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்வதை ஆதரிப்பதாக கூறினார். ஆனால் அதேநேரத்தில் தேர்தல் நடைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்த முனைந்தால் ஏற்க முடியாது என்பதை ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் விரும்பத்தகாத வகையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட எந்தச் சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக் கொள்ளாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.