CM Pinarayi Vijaya
CM Pinarayi Vijaya pt desk
இந்தியா

"பாகுபாடு காட்டப்படுவதால் தான் வட - தென்னிந்தியா வாதங்கள் வருகின்றன" – கேரள முதல்வர் பினராயி விஜயன்!

webteam

நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது எனக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக எம்பி திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் பகவத்மான், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இடைக்கால பட்ஜெட் 2024-2025

போராட்டத்தில் பேசிய பினராயி விஜயன்,

"இந்த போராட்டம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்கிறது, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பை கோருகிறது. தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் கூட கேரளா வஞ்சிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் கேரளாவை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. ஒரு சிறப்பு நிதி விவகாரங்களிலும் கடுமையாக கேரளாவை தண்டித்துள்ளது மத்திய அரசு.

இந்த போராட்டம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்கிறது, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பை கோருகிறது.

இந்த ஒட்டுமொத்த பாதிப்புகளுக்கு கேரளா ஒன்றாக இணைய வேண்டும். மத்திய அரசால் பாதிக்கப்படும் அத்தனை மாநிலங்களும் ஒன்றாக இணைய வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தை மேம்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும். வட இந்தியா தென்னிந்தியா என்ற வாதங்கள் எழுவதாக மத்திய அரசின் பல அமைச்சர்கள் குறை கூறுகிறார்கள். பாகுபாடு காட்டப்படுவதால் தான் இந்த வாதங்கள் வருகிறது என்பது ஏன் அவர்களுக்கு புரியவில்லை.

பாகுபாடு காட்டப்படுவதால் தான் இந்த வாதங்கள் வருகிறது என்பது ஏன் அவர்களுக்கு புரியவில்லை.
CM Pinarayi Vijaya and PM Modi

போராட்டத்தின் நோக்கம், கேரளா மட்டுமல்ல அனைத்து மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாப்பதாகும். மாநில அரசுகளின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பறிக்கும் வேலையை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. டெல்லி அரசின் அதிகாரங்களை மத்திய அரசு ஆளுநரை கொண்டு பறித்ததும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் அந்தத் தீர்ப்பை மாற்றும் வகையில் அவசர சட்டம் கொண்டு வந்தது என மத்திய அரசு எவ்வளவெல்லாம் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மத்திய அரசு நெருப்புடன் விளையாடுகிறோம் என்பது தெரியாமல் செய்து வருகிறார்கள்

இதே போல தான் பஞ்சாப், மேற்குவங்கம், ஒடிசா, கேரளா, தமிழ்நாடு என பாஜக ஆளாத மாநிலங்களில் கடுமையான மோதல் போக்கை மத்திய அரசு கையாண்டு வருகிறது. மத்திய அரசு நெருப்புடன் விளையாடுகிறோம் என்பது தெரியாமல் செய்து வருகிறார்கள்” என பினராய் விஜயன் காட்டமாக பேசினார்.