நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் மாயமாகி இருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த அதிர்ச்சி தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, 36 ஆயிரம் குழந்தைகள் மாயமானது தொடர்பான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, குழந்தைகளை கடத்தும் கும்பல்களுக்கு பல்வேறு மாநிலங்களில் தொடர்பு இருப்பதால், இதனை சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், குழந்தைகள் மாயமான புகார்களில் 4 மாதங்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், அதனை மத்திய அரசின் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு மாற்ற மாநில காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினரை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 58,665 குழந்தைகளும், பீகாரில் 24 ஆயிரத்து 291 குழந்தைகளும் மாயமாகி இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.