நிதி கமிஷனின் பரிந்துரையின்படி, குறிப்பிட்ட சில வரி வருவாயை நியாயமான மற்றும் சமமான அளவில் மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்வது வழக்கம். இதுவே வரிப் பகிர்வாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரியால் பெறப்படும் நிதியை, மத்திய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்து வருகிறது.
அதன்படி, கடந்த 2024 டிசம்பரில் ரூ.89,086 கோடி நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியது. தற்போது மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், நலத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் வசதியாக மாநில அரசுகளுக்கு ரூ.1.73 லட்சம் கோடி வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.31,039.84 கோடியும், பீகாருக்கு ரூ.17,403.36 கோடியும், மேற்கு வங்காளத்திற்கு ரூ.13,017.06 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவுக்கு ரூ.10,930.31 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.10,426.78 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. குஜராத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடியும், சட்டீஸ்கருக்கு ரூ.5,895 கோடியும், அசாம் மாநிலத்திற்கு ரூ.5,412 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
கோவா மற்றும் சிக்கிம் ஆகியவை முறையே ரூ.667.91 கோடி மற்றும் ரூ.671.35 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழ்நாட்டிற்கு ரூ.7,057 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவுக்கு ரூ.7 கோடியையும், கேரளாவுக்கு ரூ.3330 கோடியையும் வழங்கியுள்ளது.
2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கு 2020-21இல் இருந்ததைப் போலவே 41 சதவீதமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது 2015-20 காலகட்டத்தில் 14வது நிதிக்குழு பரிந்துரைத்த 42 சதவீத பங்கைவிட குறைவாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களைக் கருத்தில்கொண்டு 1 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.