model image ai generated
இந்தியா

மொபைல் டேட்டாவுக்கு விரைவில் தனி வரி? 1 GBக்கு ரூ.1 விதிக்க மத்திய அரசு பரிசீலனை!

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒரு GBக்கு ₹1 வரி விதிப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

Prakash J

இன்றைய காலத்தில் உலகளவில் பெரும்பாலானோர் இணையத்தை மொபைல் போன்கள் மூலம் பயன்படுத்துகின்றனர், மேலும் ஸ்மார்ட்போன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒரு GBக்கு ₹1 வரி விதிப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

உலகம் டிஜிட்டல் மயத்தை நோக்கி வேகமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும் அதற்கு நிகராக வேகமெடுக்கிறது. அந்த வகையில், இன்று கைப்பேசிகளின் பயன்பாடு அதிகமாக வளர்ந்துள்ளது. கிராமம் முதல் நகரம் வரை என அனைவரிடமும் கைப்பேசி இல்லாத நபரையே பார்க்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இந்தியா உலகில் கைப்பேசி பயன்பாட்டில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. இணையம், வணிகம், கல்வி, தொடர்பு ஆகிய அனைத்திலும் மொபைல் முக்கிய பங்கு வகிக்கிறது.

model image

இந்தியாவில் கைப்பேசி (மொபைல்) பயன்பாடு கடந்த 15–20 ஆண்டுகளில் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் சுமார் 1.1–1.2 பில்லியன் மொபைல் இணைப்புகள் உள்ளன. மேலும், கைப்பேசியின் வரவால் உலகமே கைவிரலுக்குள் அடங்கிப் போய்விடுகிறது. இணையதள டேட்டா மூலம் அவர்கள் அனைவரும் உட்கார்ந்த இடத்திலேயே பெற்றுவிடுகின்றனர். இணையம் பயன்படுத்தும் மக்களில் பெரும்பாலானவர்கள் கைப்பேசி மூலமாகவே இணையத்தை அணுகுகிறார்கள். இந்தியாவில், சுமார் 700–800 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் உள்ளனர்.

இந்தியாவில் மொபைல் இணையத்தின் வளர்ச்சிக்கு மலிவு விலையில் கிடைக்கும் டேட்டாவே காரணமாகும். இந்த நிலையில், இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்படுத்துவதற்கு தனியாக வரிவிதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில் இந்த திட்டம் விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறைக்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் அளித்துள்ளது.

model image

கூடுதல் வருவாய் ஈட்ட மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் திரைநேரத்தைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கங்கள் என கூறப்படுகிறது. ஒரு ஜிபி (GB) டேட்டாவிற்கு ரூ.1 வரி விதிக்கப்பட்டால்கூட, அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.22,900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மொபைல் ரீசார்ஜ்களுக்கு 18% ஜிஎஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது. புதிய வரி அமலுக்கு வந்தால் இணையப் பயன்பாட்டுச் செலவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.