இந்தியா

பாரத் பெட்ரோலியத்தை விற்கும் முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு! என்ன காரணம்?

ச. முத்துகிருஷ்ணன்

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று அலை மற்றும் ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பாதிக்கப்பட்டுள்ளதாக முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 2020-ல் முதலீட்டாளர்கள் வாங்க முன்வரலாம் என அறிவிப்பு வெளியானது. ஆனால் நவம்பர் 2020-க்குள் மூன்று முதலீட்டாளர்கள் மட்டுமே பங்குகளை வாங்க முன்வந்தனர். எரிபொருள் விலை நிர்ணயம் குறித்த தெளிவின்மை போன்ற பிரச்னைகளில் இரண்டு முதலீட்டாளர்கள் வெளிநடப்பு செய்ததால் ஒரு முதலீட்டாளர் மட்டுமே போட்டியில் எஞ்சியிருந்தார். இதனால், பாரத் பெட்ரோலிய பங்குகளை தகுதியான முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்பதால், அவற்றை விற்கும் முடிவை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.