2014-15 நிதியாண்டு மற்றும் 2024-25க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது மற்ற ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிற்கான மொத்த செலவான ரூ.147.56 கோடியைவிட 17 மடங்கு அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது, சமஸ்கிருதத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் (சராசரியாக) ரூ.230.24 கோடியும், மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.13.41 கோடியும் செலவு செய்துள்ளது. இதில் தமிழ், சமஸ்கிருதத்தின் மொத்த நிதியுதவியில் 5% க்கும் குறைவாகவும், கன்னடம் மற்றும் தெலுங்கு தலா 0.5% க்கும் குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளம் தலா 0.2% க்கும் குறைவாகவும் பெற்றுள்ளன.
2004ஆம் ஆண்டு, ‘செம்மொழி’ என்று அறிவிக்கப்பட்ட முதல் மொழியான தமிழ், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான மானியங்கள் (GPIL) திட்டத்தின்கீழ் ரூ.113.48 கோடியைப் பெற்றது. இது, 2005ஆம் ஆண்டில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகையைவிட 22 மடங்கு குறைவு. 2008 மற்றும் 2014க்கு இடையில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற மீதமுள்ள நான்கு மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த நிதியாக ரூ.34.08 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
உருது, இந்தி மற்றும் சிந்தி மொழிகளுக்கான செலவினத்தைவிட சமஸ்கிருதத்திற்கான செலவு அதிகமாகும். இவற்றில் எதுவும் பாரம்பரிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 2014-15 மற்றும் 2024-25க்கு இடையில் இந்தி, உருது மற்றும் சிந்தி மொழிகளுக்கான ஒருங்கிணைந்த நிதி ரூ. 1,317.96 கோடி ஆகும்.
இது சமஸ்கிருதத்திற்காகச் செலவிடப்பட்ட தொகையில் தோராயமாக 52.04% ஆகும். இந்த காலகட்டத்தில், உருது மொழிக்கு தனித்தனியாக ரூ.837.94 கோடியும், இந்தி மொழிக்கு ரூ.426.99 கோடியும், சிந்தி மொழிக்கு ரூ.53.03 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.