இந்தியா

மேகதாது அணை : கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு 

webteam

காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. 

தமிழக அரசின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அணைக்கான மாற்று இடத்தை தெரிவிக்காததால் மாற்று இடத்தை குறிப்பிட வேண்டும்  என அறிவுறுத்தி விரிவான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையினர் நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது. தமிழகம் - கர்நாடகா இடையே சுமூக தீர்வு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமாரசாமி முதல்வராக இருந்த போது வைக்கப்பட்ட கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சகம் அனுமதி மறுத்துள்ள போதும், கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்ற பின், முதன்முறையாக நேற்று டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடியை சந்தித்து  மேகதாது அணை குறித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன் கடிதம் ஒன்றையும் பிரதமர் மோடியிடம் எடியூரப்பா வழங்கினார். அதில், மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்த சட்டமோ, விதியோ இல்லை என கூறப்பட்டுள்ளது. அத்துடன் மேகதாது அணை கட்டப்படவுள்ள இடம் கர்நாடகா எல்லைக்குள் உள்ளது. கர்நாடகா எல்லைக்குள் அணை கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் தடை விதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.