இந்தியா

ஆதார் அடிப்படையில் இந்தியர்களின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்க மத்திய அரசு திட்டம்?

ஆதார் அடிப்படையில் இந்தியர்களின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்க மத்திய அரசு திட்டம்?

webteam

இந்தியர்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் ஆதார் தரவுகளின் அடிப்படையில் கண்காணிக்கும் வகையிலான கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கோடாரி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சேகரித்த விவரங்களில், இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஆதார் அட்டை பெற்றிருக்கும் இந்தியர்கள் அனைவரையும், அவர்களின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இடம்பெயர்ந்து செல்வது, வேறு வேலைக்குச் செல்வது, சொத்துக்கள் வாங்குவது, திருமணம், குழந்தை பிறப்பு, இறப்பு, நிதிநிலைமை உள்ளிட்ட சகலவிதமான அம்சங்களையும் கண்காணிக்கப்பட உள்ளது. இந்தக் கண்காணிப்புகளுக்கு வசதியாக, ஆதார் தரவுகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைக்கப்பெற்ற தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பல்வேறு துறைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள் ஆதார் தகவல் சேகரிப்புத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு விட்ட பிறகு, தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அந்த மாற்றங்கள் மத்திய அரசின் கவனத்துக்கு செல்லும் என ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.