டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் இன்று மதியம் 12 மணிக்கு மத்திய அரசு இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 8வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே நடைபெற்ற் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமானால் சிறப்பு அவசர சட்டம் மூலம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு சார்பில் ஒருவர் மட்டுமே பேச வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு மத்திய அரசு சார்பில் விவசாயிகளிடம் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இதில் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும் எனவும் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கும் எனவும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. வேளாண் சட்டங்களுக்கும் கொள்முதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என எடுத்துக்கூற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதேசமயத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது எனவும் அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருக்கிறது என்பதையும் வலியுறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கப்படும் எனவும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர்கள் வலியுறுத்த இருக்கிறார்கள எனக் கூறப்படுகிறது.