ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், ஆயுள் தண்டனை கைதிகள் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவது வழக்கம் என்று கூறிய மனுதாரர்கள், தமிழக அரசு தங்களை மட்டும் 20 ஆண்டுகள் கழிந்த பிறகும் விடுவிக்காமல் உள்ளதாகவும், எனவே தங்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில், மத்திய அரசு தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாமல் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதில், மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் பொருந்தும் எனவும் உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தனித் தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இந்நிலையில், உயர்நீதிமன்றம் இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது. சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால், இதில் மாநில அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சகத்தின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.