modi, gold x page
இந்தியா

இனி தங்கம் வாங்குவதை மறந்துவிடலாம்.. 15% வரி உயர்வை அறிவித்த மத்திய அரசு! கிராமுக்கு இவ்வளவு உயருமா?

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு மத்திய அரசு 15% வரி விதித்துள்ளதால், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Praveen Joshva L

இந்தியா தனது தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே ஈடுகட்டும் நிலையில், இதன் காரணமாக அதிகளவில் அந்நியச் செலாவணி வெளியேறி வருகிறது. இது, ரூபாயின் மதிப்பில் மேல் நேரடியாக தாக்கம் செலுத்திவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் இறக்குமதியில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவையே பெரும்பங்கை வகிக்கிறது. இதில் கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதால், தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மக்கள் முதலீட்டு நோக்கத்திற்காக அதிக தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பிற துறைகளில் முதலீட்டை ஊக்குவிக்க அரசு திட்டமிடுகிறது.

இந்தச் சூழலில், இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அரியவகை உலோகங்களின் சுங்க வரியை 15% உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு தங்கம், வெள்ளி மட்டுமின்றி பிளாட்டினம் போன்ற பிற விலையுயர்ந்த உலோகங்கள் மீதான வரி விதிப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் இன்றுமுதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்கம்

இதன் காரணமாக ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 2,000 முதல் 3,000 வரை உடனடியாக உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. இப்போது 15% வரி மற்றும் 3% ஜிஎஸ்டி சேரும்போது, ஒவ்வொரு ஒரு கிராம் தங்கத்திற்கும் வரிச்சுமை சுமார் ரூபாய் 700 முதல் 900 வரை கூடலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக இனி சாமானியர்களால் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.