இந்தியா

"தளர்வுகளை அறிவிப்பதில் கவனம் தேவை" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

Veeramani

மாநில அரசுகள் மிக கவனமாக பரிசீலித்த பின்பே பொது முடக்க தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பொது முடக்க தளர்வுகளை அளிப்பது அவசியமானது என அஜய் பல்லா குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் கள நிலவரங்களை நன்கு ஆராய்ந்து அறிந்து அதன் பின்பே உரிய தளர்வுகளை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பல மாநிலங்களில் பொது முடக்க தளர்வுகளுக்கு பின் சமூக இடைவெளியும் முகக் கவசம் அணிவதும் குறைந்து வருவதாக உள்துறை செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிடுமாறும் உள்துறை செயலாளர் மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில்...

இதனிடையே, கொரோனா பரவல் அதிகம் உள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகளும் அமலில் உள்ளன. 21ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பது குறித்த மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவல் விகிதம் அதிகம் உள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாம் என முதல்வர் ஸ்டாலினிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை வழங்க வேண்டாம் எனவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.