model image எக்ஸ் தளம்
இந்தியா

’போர் பதற்றம்.. ராணுவத்திற்கு நிதி அளியுங்கள்’ வாட்ஸ் அப்பில் பரவும் வதந்தி.. மத்திய அரசு விளக்கம்!

’இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை’ என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தப் படுகொலைக்கு, பாகிஸ்தானை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் அரசாங்கத்திடமிருந்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை ஆதரிக்கும் என எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், இந்திய ராணுவமும் உஷார் நிலையில் உள்ளது.

இதற்கிடையே, ’போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள்’ என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்திய ராணுவத்தை நவீனமயமாக்குவதற்காக நன்கொடை கோரி அரசாங்கம் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்துள்ளதாகவும், அதற்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவின. இதற்கு தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ’இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை’ என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய இராணுவத்தின் நவீனமயமாக்கலுக்காகவும், போரில் காயமடைந்த அல்லது கொல்லப்பட்ட வீரர்களுக்காகவும் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடர்பாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. ஆகையால், இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுமக்கள், இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு இரையாகாமல் இருக்க வேண்டும். அந்தச் செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் அனைத்தும் தவறானவை. தவிர, போர் நடவடிக்கைகளின்போது கொல்லப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக அரசாங்கம் பல நலத்திட்டங்களைத் தொடங்கியுள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வாட்ஸ் அப் செய்திகளில் வெளியான வதந்திகளில் முதன்மை இயக்குநராக நடிகர் அக்ஷய் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குத்தான் மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.