ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை திட்டத்தை இன்னும் ஓராண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
இந்திய குடிமகன் ஒருவர் தனக்கான ரேஷன் பொருளை எந்த மாநிலத்திலும் வாங்கிக் கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநிலங்களும், மத்திய ஆட்சிப் பகுதிகளும் அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதன் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் செல்வோர் எளிதாக ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்றும் போலி ரேஷன் கார்டுதாரர்களை கண்டறியவும் இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் இத்திட்டத்தை மிக எளிதாக செயல்படுத்த முடியும் என்றும் ஏனெனில் அம்மாநிலங்களில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரேஷன் பொருள் விநியோகம் நடப்பதாகவும் அமைச்சர் பஸ்வான் தெரிவித்தார். இரண்டாவது முறையாக அமைந்த மோடி அரசின் முதல் நூறு நாள் திட்டங்களில் ஒரு நாடு;ஒரு ரேஷன் அட்டை திட்டமும் ஒன்று என அவர் தெரிவித்தார்.