பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை தாக்குவதையோ, கொலை செய்வதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
பசுக்காப்பாளர்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாடுகளை ஏற்றிச்செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பசு பாதுகாப்புக்காக சமீபத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தில் மாற்றம் செய்யவும் ஆலோசித்து வருகிறோம்' எனவும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பசுப்பாதுகாவலர்களால் தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்ட ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில அரசுகளும் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
வட மாநிலங்களில் பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில், மாட்டுக் கறியை எடுத்துச் செல்பவர்களையும், மாடுகளைக் கொண்டு செல்பவர்களைக் கும்பலாகச் சேர்ந்து தாக்குவதும், கொலை செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்தச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும் அவர்கள் மீது இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் உறுதியான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.