நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், இதைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு, ”நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால், இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும்” எனகிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அரசாணைப்படி, சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சிகிச்சை நேற்று முன்தினம் முதல் (மே 5) நடைமுறைக்கு வருகிறது.
விபத்து நடந்த நாள் முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை கண்காணிக்க சாலைப் போக்குவரத்துத் துறை செயலாளரின்கீழ் வழிகாட்டுதல் குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது.