இந்தியா

மார்ச் மாதத்துக்குள் மதுரை எய்ம்ஸ் ஒப்பந்தம் இறுதியாகும் - மத்திய அரசு

Sinekadhara

மார்ச் மாதத்துக்குள் மதுரை எய்ம்ஸ் ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகதரத்தில் நவீன வசதிகளுடன் 750 படுக்கைகள், 100 மருத்துவப் படிப்புகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் கட்டப்பட உள்ளது. தமிழகம் மட்டுமின்றி தென்இந்தியாவின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி கலந்துகொண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அது முடிந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 45 மாதங்களில் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் 24 மாதங்கள் ஆகியும் இதுவரை முதல்கட்ட பணிகள்கூட தொடங்கப்படவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்காக ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்துடன் கடனுதவி ஒப்பந்தம் போடப்பட்டு அந்த நிதிக்குழு இப்பகுதியில் 5க்கும் அதிகமான முறை ஆய்வு நடத்தியுள்ளது. முதல்கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வதற்காக 6.4 கி.மீ தூரம் கொண்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

அடிக்கல் நாட்டும்போது இத்திட்டத்தின் மதிப்பீடு ஆயிரத்து 264 கோடி ரூபாய். ஆனால் கால தாமதத்தால் திட்ட மதிப்பீடு தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கால தாமதம் செய்தால் அதற்கு நாம் கொடுக்கும் விலை மேலும் அதிகமாகும் என கவலைப்படுகின்றனர் மதுரை மக்கள். ஆனால் மார்ச் இறுதிக்குள் ஜைக்கா நிதி நிறுவனத்துடன் இறுதிக்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.