இந்தியா

ரிசர்வ் வங்கி சர்ச்சை குறித்து மத்திய அரசு விளக்கம்

webteam

ரிசர்வ் வங்கி சுயாட்சி அதிகாரத்துடன் செயல்படுவது அவசியம் என்றும், அந்த அமைப்புக்கு மதிப்பளித்து அரசு பேணிக் காத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வராக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில் வங்கிகள் அளித்த கடன்களின் மீது ரிசர்வ் வங்கி உரிய கண்காணிப்பு மேற்கொள்ளாததால் அக்கடன்கள் வராக்கடன்களாக மாறியதாக நிதியமைச்சர் ஜெட்லி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், இதை செய்ய தவறினால் மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் அவ்வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பேசியிருந்தார்.


 
அதேநேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய அரசு நேரடியாக உத்தரவிட உதவும் சட்டப்பிரிவு 7ஐ அமலுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க கூடும் என டெல்லி வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் அதிகாரம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு நடைமுறை என்று கூறியுள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்களில் ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பின்பே முடிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பொது மக்களின் நலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருதியே அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரிசர்வ் வங்கிக்கு அரசு நேரடியாக உத்தரவிட வழிசெய்யும் சட்டப்பிரிவு 7 குறித்து அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கிடையில் சட்டப்பிரிவு 7ஐ அரசு கையில் எடுப்பதாக தகவல் வெளியானதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். இத்தகவல் உண்மையாக இருந்தால் அது மிகவும் மோசமான செய்தியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் போக்கு பொருளாதாரத்தின் உண்மை நிலையை மறைக்க அரசு எடுக்கும் முயற்சி என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.