மக்கள் தொகை கணக்கெடுப்பு AI
இந்தியா

சுதந்திர இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கீடு.. 40 கேள்விகளை வெளியிட்டது மத்திய அரசு!!

2027 பிப்ரவரியில் நடைபெறும் 2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான 40 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Premkumar S

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2-ம் கட்டத்தில் கேட்கப்பட உள்ள 40 கேள்விகளை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியமான அம்சமாக, 1931-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அனைத்து சமூகங்களுக்குமான சாதிவாரி கணக்கெடுப்பும் இடம்பெறும் நிலையில், அதற்கான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் குறிப்பிடும் சாதியை அப்படியே பதிவு செய்யும் வகையில் இந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய மக்கள்

இந்தியாவில் இதுவரை 15 மக்கள்தொகை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. இதில் சுதந்திரத்திற்கு பிறகு மட்டும் 7 கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்தச்சூழலில் தான், 5 ஆண்டு தாமதத்திற்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2 கட்டங்களாக இந்தியா முழுவதும் தற்போது நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில், முதல் கட்ட கணக்கெடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தச்சூழலில் தான், 2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதற்கான 40 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில், ஒருவர் பட்டியலினத்தவரா, பழங்குடியினரா அல்லது வேறு சாதியைச் சேர்ந்தவரா என்பது தொடர்பான கேள்வி 10-வது கேள்வியாக இடம்பெற்றுள்ளது.

இதுதவிர, பெயர், வயது, பாலினம், திருமண நிலை, மதம், தாய்மொழி, கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு நிலை, மாற்றுத்திறன் உள்ளிட்ட பல்வேறு தனிநபர் மற்றும் சமூக விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன. மேலும், ஒருவர் பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்ந்ததற்கான காரணம், எவ்வளவு காலமாக தற்போதைய பகுதியில் வசிக்கிறார் போன்ற குடிபெயர்வு தொடர்பான தகவல்களும் கேட்கப்பட உள்ளன.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கோப்புப்படம்

இதோடு, ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்குகளின் எண்ணிக்கை, செல்போன் எண் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திய இடம் போன்ற தகவல்கள் அடங்கிய கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

அதேசயமம், மத்திய அரசின் அறிவிப்பில், பனிப்பொழிவு அதிகம் உள்ள லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் பகுதிகளில் 2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் செப்டம்பர் மாதமே 1 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது எனத் தெரிவித்திருக்கிறது.

நாட்டின் பிற பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு நடைபெறும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் நாட்டின் சமூக அமைப்பு குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் என்பதால், எதிர்காலத்தில் இடஒதுக்கீடு, நலத்திட்டங்கள் மற்றும் சமூகநீதிக் கொள்கைகள் தொடர்பான முடிவுகளில் இந்த தரவுகள் முக்கிய பங்கு வகிக்கலாம்.

அதனால், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் மக்கள் தொகையை கணக்கிடும் நடவடிக்கை மட்டுமல்லாமல், இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார நிலையை விரிவாக பதிவு செய்யும் மிகப்பெரிய தரவு சேகரிப்பு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.