எஸ்.சி., எஸ்.சி., எம்.பி.சி., ஓபிசி என பிரிவுகளை மட்டும் கூறாமல் சாதிப்பெயர்களை குறிப்பிட்டு 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்தியாவில் 10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்முறை அமலில் உள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலமான 1872ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மக்களை எளிதில் கணக்கெடுக்கும் வகையில், அவர்களை சாதிப்பிரிவுகளின் கீழ் ஆங்கிலேயர்கள் கணக்கெடுத்தனர். இந்த முறையே தற்போது வரை நடைமுறையில் உள்ளது. அப்போதைய காலக் கட்டத்தில் இருந்த பொருளாதார அடிப்படையில் சாதிப்பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து தரப்பு ஏழை மக்களுக்கும் இடஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்கும் வகையில், மத்திய அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவி மக்கள் தக்கள் சாதிப்பிரிவை மட்டுமே குறிப்பிட்டு வந்துள்ளனர். ஆனால் இந்த முறை நடத்தப்படும் கணக்கெடுப்பில் அவர்கள் ஓபிசி என்ற பிரிவுடன், தங்கள் சாதிப்பெயரையும் குறிப்பிட வேண்டும் என்ற புதியமுறை அமல்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் ஓபிசி பிரிவுகளிலும் பொருளாதாரத்தால் நலிவடைந்தவர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்.சி., எஸ்.டி சாதிப்பிரிவினர்களில் எத்தனை பேர் வீட்டில் டிவி மற்றும் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன எனவும் கணக்கிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க இந்த புதிய முயற்சி மேற்கொள்ள இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.