இந்தியா

செல்போன் டவர் கதிர்வீச்சு: தொலைத்தொடர்பு அதிர்ச்சி

செல்போன் டவர் கதிர்வீச்சு: தொலைத்தொடர்பு அதிர்ச்சி

webteam

சென்னையில், அடுக்குமாடி குடியிருப்புகள், தரை தளங்களில் உள்ள செல்போன் டவர்களில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கதிர்வீச்சு கட்டுப்பாடு பாதுகாப்பு சோதனை, சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு, தொலைத்தொடர்பு துறை அளித்திருக்கும் பதில் மூலம், இந்த தகவல் தெரியவந்திருக்கிறது. செல்போன் டவர்களிலிருந்து, வெளியாகும் கதிர்வீச்சை கண்காணிக்கும் வழிமுறைகள் என்ன? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திக்கேயன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, சென்னையில் உள்ள தொலைத்தொடர்புத்துறையின் தலைமை பொது தகவல் அதிகாரியும், இயக்குநருமான தமிழ்மணி பதிலளித்திருக்கிறார். அதில், சென்னை பெருநகர பகுதிகளில், 36 ஆயிரத்து 442 செல்போன் டவர்கள் நிறுவபட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். பன்னாட்டு அளவில், மிக கடுமையான அலைவரிசை கதிர்வீச்சு கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானதாகத் திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புதுறையின் ஒழுங்குமுறை விதிகளை மீறி, அதிகளவிலான கதிர்வீச்சு அளவுகளை கொண்ட டவர்களை பயன்படுத்தும் செல்போன் நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை பெருநகரில், அளவுக்கதிகமான கதிர்வீச்சு மாறுபாட்டு நடவடிக்கையில் சிக்கி, எத்தனை செல்போன் நிறுவனங்கள், தண்டிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படவில்லை.

ஆண்டுக்கொருமுறை, செல்போன் டவர்களின் கதிர்வீச்சு கட்டுப்பாட்டு அளவை, தொலைத்தொடர்புத்துறை கண்காணிக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில், ஆண்டுக்கு ஒருமுறை, 10 சதவீத டவர்களில் கதிர்வீச்சு அளவுகள் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ஏர்டெல் நிறுவனம் 9 ஆயிரத்து 607 செல்போன் டவர்களை நிறுவியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வோடஃபோன் நிறுவனம், 7 ஆயிரத்து 768 செல்போன் கோபுரங்களை அமைத்துள்ளது. செல்போன் சந்தையில், விட்ட இடத்தை பிடிக்க இலவசத்தை அள்ளிவீசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 6 ஆயிரத்து 190 செல்போன் டவர்களை அமைத்துள்ளது. ஐடியா 4 ஆயிரத்து, 284 டவர்களையும், ஏர்செல் 4 ஆயிரத்து 111 டவர்களையும், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 3 ஆயிரத்து 98 செல்போன் கோபுரங்களையும் அமைத்துள்ளன.