CDSCO flags cough syrup as spurious 112 drugs fail quality tests pt web
இந்தியா

இருமல் மருந்து உட்பட 112 மருந்துகள் தரமற்றவை.. எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு..!

இருமல் மருந்து உட்பட 112 மருந்துகள் தரமற்றவை.. எச்சரிக்கை விடுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு..

Vaijayanthi S

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 24 குழந்தைகள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மத்திய மருந்து தர கட்டுப்பாடு மைய அதிகாரிகள், குழந்தைகள் குடித்த குடிநீர், இருமல் மருந்து மாதிரிகள், டாக்டர்களின் பரிந்துரை கடிதம் உள்ளிட்டவைகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தைகளின் உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என தெரியவந்தது. அதன் பிறகு தொடர்ந்து இந்தியா முழுவதும் மத்திய மருந்து தர கட்டுப்பாடு மைய அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் , செப்டம்பர் மாதத்தில், சில இருமல் சிரப் மருந்துகள் போலியானவை என்றும், 112 மருந்துகள் தரமற்றவை என்றும் அடையாளம் கண்டுள்ளது.

இந்தியாவின் மத்திய மருந்துகள் தரம் கட்டுப்பாட்டு அமைப்பு செப்டம்பர் 2025-க்கான தனது மாதாந்திர சோதனையின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு போலி இருமல் மருந்து உட்பட மொத்தம் 112 மருந்துகள் அதன் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை (NSQ - Not of Standard Quality) என்பது கண்டறியப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் எடுக்கப்பட்ட மாதிரியில், "பெஸ்டோ-காஃப் (Besto-Cof - Dry Cough Formula)" என்ற இருமல் சிரப்பின் ஒரு தொகுதி போலியானது என்று தெரியவந்துள்ளது..

இந்த மருந்தை அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளர் ஒருவர், மற்றொரு நிறுவனத்தின் பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தயாரித்துள்ளார். இருமல் சிரப் தவிர, நாடு முழுவதும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்ட மேலும் 112 மருந்துகள் தரமற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரமற்ற மருந்துகள் பட்டியலில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளான பாராசிட்டமால் , பான்டோபிரசோல் , மல்டிவைட்டமின் சப்ளிமெண்டுகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் டெல்மிசார்டன்  மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துகள் அடங்கும்.

இந்தத் தரக் குறைபாடுடைய மருந்துகள் உடனடியாகக் கண்டறியப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்ய, மத்திய மற்றும் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இருமல் மருந்து கலப்படம் காரணமாக குழந்தைகள் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இதனால் முன்னெச்சரிகை நடவடிக்கையாக மருந்துகளின் தரக் கட்டுப்பாடு அமைப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது என்பது குரிப்பிடத்தக்கது..