இந்தியா

நாய்களுக்கு உணவளித்த பெண் மீது மின்னல் வேகத்தில் மோதிய கார் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

சங்கீதா

சண்டிகர் மாநிலத்தில் தெருவில் நாய்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்த 25 வயது இளம் பெண் மீது, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் வேகமாக ஓட்டி வந்த எஸ்யூவி கார் ஒன்று மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர் மாநிலம் செக்டர் 51 பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்விதா கௌசல். 25 வயதான இவர், கட்டிடக்கலை படிப்பை முடித்துவிட்டு, தற்போது மத்திய அரசின் குடிமைப் பணிக்கான தேர்வுக்கு தயாராகி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இரவு நேரங்களில் தனது வீட்டுக்கு அருகில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் வழக்கத்தை தேஜஸ்விதா வைத்துள்ளார். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 11.40 மணியளவில், தனது தாயார் மஞ்சிந்தர் கவுருடன் சேர்ந்து தனது வீட்டுக்கு அருகில் உள்ள செக்டார் 53 பகுதியில் பர்னிச்சர் மார்க்கெட் முன்பு உள்ள தெரு நாய்களுக்கு அவர் உணவளித்துக் கொண்டிருந்தார்.

தேஜஸ்விதாவின் தாயார் சிறிது தூரத்தில் நின்றுக்கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு அவர் உணவளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு அதிவேகமாக வந்த எஸ்யூவி கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. கார் மோதியதும் தேஜஸ்விதா சுருண்டுவிழ, சாப்பிட்டுக்கொண்டிருந்த நாய்கள் எல்லாம் அங்கிருந்து தெறித்து வேகமாக ஓடிவிட்டன. இதனைக் கண்ட அவரது தாயார் மஞ்சிந்தர் கவுர் அலறியடித்து ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது தலையில் பலத்த காயங்களுடன் தேஜஸ்விதா சாலையில் கிடந்த நிலையில், அக்கம் பக்கத்தில் உதவிக் கேட்டுள்ளார்.

ஆனால் ஒருவரும் உதவிக்கு வராத நிலையில், தனது போனில் வீட்டுக்கு தகவல் சொல்லிவிட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கும் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பின்னர், தனது மகள் தேஜஸ்விதாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டுசென்ற நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தேஜஸ்விதா தலையில் 18 தையல்கள் போடப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாதநிலையில், விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலானதையடுத்து, 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

அதில், ஓய்வுபெற்ற ராணுவ மேஜரான 40 வயது சந்தீப் சஹி மஜ் என்பவர் தான் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைதுசெய்து விசாரணை நடத்தினர். அதில், வேறொரு காரின் மீது மோதியதாக நினைத்ததால்தான், காரை நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும், கொஞ்சம் தூரம் சென்று நிறுத்திப் பார்த்தப்போதுதான் தனது கார் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது என்றும், தேஜஸ்விதா மீது மோதியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கைதுசெய்யப்பட்ட சந்தீப் சஹி கூறியுள்ளார்.

மேலும், சேதம் அடைந்த ஹூண்டாய் கிரெட்டா காரை அவர், பழுதுப்பார்க்க கொடுத்திருந்த இடத்திலிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக நடந்துவருவது அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

- ஜெ.பிரகாஷ்