open book exam pattern
open book exam pattern  pt
இந்தியா

’Open Book’ - இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்; 9-12ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு குட்நியூஸ்!

யுவபுருஷ்

மாணவர்களுக்கான தேர்வு முறையை மேம்படுத்துவது குறித்து, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சிபிஎஸ்இ அமைத்த குழு கொடுத்த பரிந்துரைகளில் ஒரு பரிந்துரையாக இருந்த புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை விரைவில் சோதனை முறையில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

வரும் கல்வியாண்டில் நவம்பவர் - டிசம்பர் மாதத்தில் இருந்து 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓபன் புக் எனப்படும் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் மாணவர்கள், தேர்வறைக்கு புத்தகம் அல்லது அவர்களது குறிப்பேடுகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

முதற்கட்டமாக, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஓபன் புக் முறையில் தேர்வு நடத்தப்படும். அதேபோல 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களுக்கு புத்தகங்களை பார்த்து எழுதும் தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (National Curriculum Framework)  பரிந்துரைப்படி இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்படி புத்தகத்தை பார்த்து எழுதுவதற்கு தேர்வை எழுதாமலேயே இருக்கலாமே என்று ஒரு தரப்பு விமர்சித்து வரும் நிலையில், புத்தகத்தை பார்த்து எழுதினாலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் கேள்விகள் அமையும் என்று கூறப்படுகிறது. அதாவது, மாணவர்களின் நினைவாற்றலை மதிப்பிடாமல், பாடத்தின் மீதான புரிதல் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பின்போது கடந்த 2020ம் ஆண்டு, கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை டெல்லி பல்கலைக்கழகம் சோதனை முறையில் நடத்தியது. இந்த தேர்வு முறை அவர்களுக்கு சாதகமாக இருந்த நிலையில், சிபிஎஸ்இ, டெல்லி பல்கலைக்கழகத்திடமும் கருத்து கேட்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.