வினாத்தாள்கள் வெளியே கசிவதைத் தடுப்பதற்காகவே மாநில மொழிகளில் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கக் கோரி சி.பி.எஸ்.இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெற்றதாகவும், மாநில மொழிகளில் வினாக்கள் வேறுபட்டு இருந்ததாகவும் சி.பி.எஸ்.இ விளக்கம் அளித்துள்ளது.
நீட் தேர்வை, ஆங்கிலத்தில் 9 லட்சம் மாணவர்களும், இந்தியில் ஒன்றரை லட்சம் பேரும், மாநில மொழிகள் அனைத்தையும் சேர்த்து ஒரு லட்சம் பேர் மட்டுமே எழுதியதாகவும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால தடையால் 12 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தடையை நீக்க வேண்டும் என சிபிஎஸ்இ கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.