இந்தியா

இரண்டு நாட்களில் ராஜூவ் குமாரிடம் விசாரணை ? சிபிஐ திட்டம்

webteam

சாரதா சிட்பண்டு மோசடி விவகாரம் தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜூவ் குமாரிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். 

இதனையடுத்து சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. சிபிஐ மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. 

இந்நிலையில், காவல் ஆணையர் ராஜூவ் குமாரிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள், சனிக்கிழமையே ஷில்லாங் சென்றடைவர் என சொல்லப்படுகிறது. 

இதற்கான முன்னேற்பாடுகளை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே சிபிஐ அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள இருக்கும் ராஜூவ் குமாருக்கு, மேற்குவங்க சிபிசிஐடி காவல்துறையினர் 100 கேள்விகளை தயாரித்து வழங்கி இருப்பதாகவும், சாரதா சிட்பண்டு மோசடியை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவும் எத்தகைய கேள்விகள் கேட்கப்படலாம் என அவரிடம் விவரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருவதால் அதற்குள் ராஜூவ் குமாரிடம் சிபிஐ விசாரணையை முடித்து கொள்ளும் என தெரிகிறது.