ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது புலனாய்வை சிதைத்துவிட்டதாக தனியார் புலனாய்வு நிபுணர் மைக்கேல் ஹெர்ஸ்மாம் கூறியுள்ளது குறித்து விசாரிக்கப்படும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
பேர்பேக்ஸ் என்ற தனியார் துப்பறியும் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் மைக்கேல் ஹெஸ்மாம் சமீபத்தில் சில தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டிகளில் மாண்ட் பிளாங் என்ற பெயரில் சுவிஸ் வங்கி கணக்குகளை, தாம் கண்டுபிடித்தபோது ராஜீவ்காந்தி மிகவும் ஆத்திரமடைந்ததாகக் கூறியிருந்தார். இந்த வங்கி கணக்கில்தான் போபர்ஸ் பீரங்கி ஊழலில் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் பேர்பேக்ஸ் நிறுவனத்தை விபி சிங் நிதியமைச்சராக இருந்தபோது பணியில் அமர்த்தியது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற ஆணையம் ஒன்றை அமைத்ததாகவும் மைக்கேல் கூறியிருந்தார்.
தேவைப்பட்டால் இந்திய விசாரணை அமைப்புகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தமது பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என சிபிஐயின் தகவல் தொடர்பு அதிகாரி அபிஷேக் தயாள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.