வங்கிக் கடன் மோசடி தொடர்பாக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்வதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் குழு ஒன்று லண்டன் செல்லவுள்ளது.
சிபிஐயின் இணை இயக்குநர் மட்டத்திலான அதிகாரிகள் இங்கிலாந்து அதிகாரிகளை சந்தித்து நிரவ் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்களை அளிப்பதுடன் அதற்கான ஆதாரங்களை தருவார்கள் என தெரிகிறது.
இந்தியாவில் 13,500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் இங்கிலாந்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவது சமீபத்தில் தெரியவந்தது. அவரை நாடு கடத்தும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து நீதிமன்றம் நிரவ் மோடிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கமுடியாது என மறுப்பு தெரிவித்தது. இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.