ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தங்கள் பெயரை எழுதத் தெரியாதவர்களுக்குக் கூட, அவரது அழுத்தத்தின் காரணமாக ரயில்வே துறையில் ‘க்ரூப் டி’ வேலைகள் வழங்கப்பட்டதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் லஞ்சமாக நிலங்களை லாலு பிரசாத் தொடர்புடையவர்களுக்கு வழங்கியதாகவும், போலி கல்விச் சான்றிதழ் வழங்குவதற்கென்று தனியே பள்ளிகள் உருவாக்கப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
பிஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், 2004-2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, பலரிடம் நிலங்களை லஞ்சமாகப் பெற்று கிழக்கு மண்டல ரயில்வேயில் வேலை வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.