இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில், நீதிபதி டி.கே.ஜெயின் அறிக்கையின்படி சிபிஐ விசாரணையை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது
விஞ்ஞானி நம்பி நாராயணனை சட்டவிரோதமாக கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் விசாரணைக்காக அமைக்கப்பட்ட நீதிபதி டி.கே.ஜெயின் அறிக்கையின் படியே சிபிஐ தனது விசாரணையை நடத்தி வருகிறது என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிபிஐ தனிப்பட்ட விவகாரத்தில் தான் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்றும் டி.கே.ஜெயின் அறிக்கையின்படி விசாரணை நடத்த கூடாது என்றும் திட்டவட்டமாக கூறினர். மேலும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் எனவும் கூறினர்.