இந்தியா

சுஷாந்த் மரண வழக்கு: ரியா சக்ரபோர்த்தி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ !

jagadeesh

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் மீதும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

எம்.எஸ். தோனி படம் மூலமாக பிரபலமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைச் சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவரது தற்கொலைக்கு இந்தி சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்து சிலர் படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததுமே காரணமாகக் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் தந்தை, சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை பணம் எடுத்து அதனை வேறு ஒருவர் கணக்கில் மாற்றியதாகவும் புகார் அளித்தார். இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீஸார் சுஷாந்த் தந்தை அளித்த புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்தனர்.

சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பீகார் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து மத்திய அரசும் சிபிஐ விசாரணைக்கு அனுமதியளித்தது. இந்நிலையில் இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி சுஷாந்த் வழக்கு தொடர்பாக சிபிஐ ரியா சக்ரபோர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி உள்ளிட்ட சிலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.