இந்தியா

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு : சிபிஐ விசாரணை தொடக்கம்

webteam

நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸை சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண், கடந்த செப்டம்பர் 14ஆம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். இரவோடு இரவாக அப்பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்ற போலீசார், பெற்றோரின் அனுமதியின்றி எரியூட்டியதாக புகார் எழுந்தது. நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.

இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்தச்சம்பவம் குறித்து விசாரிக்க ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருந்த உத்தரபிரதேச அரசு, நெருக்கடி முற்றியதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. கூட்டுபாலியல் வன்கொடுமை, கொலை, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கை விசாரிக்க தனிக்குழுவையும் அமைத்துள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சிபிஐ விசாரணை ஒரு புறம் நடந்தாலும் அலகாபாத் உயர்நீதிமன்றமும் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது. இத்தனை விசாரணைகளும் அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யுமா என்பது வருங்காலத்தில் தான் தெரிய வரும்.