இந்தியா

வங்கிகளில் ரூ.7,200 கோடி மோசடி நடந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை 

webteam

சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நாடெங்கும் அதிரடி சோதனை நடத்தினர்.

7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி மோசடிகள் தொடர்பாக 42 வழக்குகளை சிபிஐ அண்மையில் பதிவு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நாடெங்கும் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து நேற்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 58 இடங்களிலும் தமிழகத்தில் 17 இடங்களிலும் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்று அதை செலுத்தாமல் ஏய்ப்பது உள்ளிட்ட வழிகளில் தொழில் துறையினர் சிலர் வங்கிகளை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட 16 வங்கிகளில் நடைபெற்றுள்ள மோசடிகள் தொடர்பாக சுமார் 2 ஆயிரம் அதிகாரிகள் நாடெங்கும் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையை சேர்ந்த சுரானா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஐ.டி.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் ஆயிரத்து 83 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் சோதனைகள் நடைபெற்றது. 

விரிவான சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.