ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தினர்.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். அதில், ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு அந்நிய முதலீடு அனுமதி அளித்தது பற்றி சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நேற்றைய தினம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்றைய தினம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இரு வழக்குகள் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜூலை 3ம் தேதி வரை ப.சிதம்பரத்தைக் கைது செய்யக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் வரும் 10ம் தேதி சிபிஐ கைது செய்யக்கூடாது என்றும் அடுத்த மாதம் 10ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது எனவும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.