இந்தியா

`வருமானத்தைவிட 579% கூடுதல் சொத்து சேர்த்துள்ளார் ஆ.ராசா’- குற்றப்பத்திரிகை தாக்கல் விவரம்

webteam

பாஜக தலைமையிலான மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்த திமுக எம்.பி ஆ.ராசாக்கு எதிராக 2015ஆம் ஆண்டில் வருனானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த்தாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விவரம், இங்கே.

ஏழு வருடங்கள் பழமையான இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிந்த போதும், சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆ. ராசா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை ஏஜென்சி தாக்கல் செய்துள்ளது. அந்த இறுதி விசாரணை அறிக்கையில் ஆ.ராசா ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது ஏஜென்சி.

1999 அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரையிலான சோதனை காலத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் என 16 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அவர்கள் 27 கோடியே 92 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டியிருந்தது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், டெல்லி, சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் போன்ற பகுதிகளில் அவர்களுக்கு சொத்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள், வைப்பீடு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கைத் தொடங்க அடிப்படையாக அமைந்ததாக சிபிஐ வட்டாரங்கள் அப்போதே தெரிவித்தன.

இதுதொடர்பாக, `பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த போது, திமுக மக்களவை எம்.பி.யாக தேர்வாகி மத்திய ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆகியவற்றின் இணை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக’ சிபிஐ அந்த சமயத்தில் பதிவு செய்தது. அந்த வழக்கு சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதுதொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக சிபிஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கு ஆ.ராசா சொத்து சேர்த்திருப்பது உறுதியானதாகவும், இது அவரது வருமான அளவிலிருந்து 579 சதவீதம் கூடுதலாக இருப்பதாக கூறி சிபிஐ சிறப்பு நிதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் 5 பேர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.