இந்தியா

56 அரசியல்வாதிகள் மீது சிபிஐ வழக்கு : 11 பேர் மீது மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு

56 அரசியல்வாதிகள் மீது சிபிஐ வழக்கு : 11 பேர் மீது மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு

webteam

கடந்த மூன்று வருடங்களில் அரசு அதிகாரிகள் மீது 160 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக மத்திய வட கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த மூன்று வருடங்களில் அரசியல்வாதிகள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதில் 26 வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும், 11 வழக்குகள் தொடக்கக்கட்ட விசாரணையில் உள்ளதாகவும், 11 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஒரு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள தகவலின்படி அரசியல்வாதிகள் மீது, 2016ஆம் ஆண்டில் 11 வழக்குகளும், 2017ஆம் ஆண்டில் 18 வழக்குகளும், 2018ஆம் ஆண்டில் 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டை பொறுத்தவரை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளை பொறுத்தவரையில் கடந்த மூன்று வருடங்களில் 160 வழக்குகளை சிபிஐ பதிவு செய்திருக்கிறது.