இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு - மேலாண்மை ஆணையம் அதிரடி‌

webteam

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே ஆறு மாதங்களுக்குப் பின் டெல்லியில் காவரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. மசூத் உசேன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழக மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருவதால், அதற்கு ஏதுவாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன், தமிழகத்திற்கான நீரை, கர்நாடக அரசு கட்டாயம் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறினார். இந்தக் கூட்டத்தில் தமிழகம் - கர்நாடகா இடையே உள்ள தண்ணீர் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது என்றும், மேலாண்மை கூட்டம் சுமுகமாக நடந்தது எ‌ன்றும் தெரிவித்தார். இதற்கிடையே, நாகை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வராசு, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேனை ‌சந்தித்துப் பேசினார்.