காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு வரும் 7- ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது.
காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை அளிக்க கர்நாடக அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டது. இது காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்கிய நீரின் அளவை விட குறைவாகும். மேலும் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் கடந்த 22-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் இதுகுறித்து பிரதமர் மோடியை சந்தித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி அதில் முடிவெடுக்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேவேளையில் கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது. அதனால் இந்த விவகாரத்தில் சட்ட சிக்கல் நிலவி வருகிறது.