காவிரி வழக்கு இன்று நடைபெற உள்ளதால் கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் தமிழக விவசாயிகள் மரத்தில் ஏறி போராடியதால் இந்த முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவிரி விவகாரத்தில் வரைவுத் திட்டத்தை மே 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து காவிரி வரைவு அறிக்கை எந்த அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காவிரி தொடர்பான வரைவுத் திட்டம் தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், கர்நாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளதால் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். வரைவுத் திட்டம் தாமதமாவதற்கு அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வரைவுத் திட்டத்தை உருவாக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மே 8-ஆம் தேதி பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக விவசாயிகள் மரத்தில் ஏறி போராடியதால் உச்சநீதிமன்ற வாளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நேற்றே மத்திய அரசு தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதையடுத்து இந்த முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.