இந்தியா

ஒருவழியாக தாக்கலானது காவிரி வரைவுத் திட்டம்

ஒருவழியாக தாக்கலானது காவிரி வரைவுத் திட்டம்

Rasus

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில், விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று வருவதால் திட்டத்திற்கு ஒப்புதல் பெற இயலவில்லை என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. கடந்த 3ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மே 14ஆம் தேதி, காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டிருந்தது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தினால், இன்று நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு, காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி ஒருவழியாக  மத்திய அரசு வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் சீலிட்ட கவரில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.