இந்தியா

சபரிமலையில் காணிக்கை செலுத்த "ஸ்வைப்பிங் மெஷின்" !

webteam

சபரிமலை தேவஸ்தானத்தின் கருவூலத்தை நிரப்ப ஏதுவாக ஸ்வைப்பிங் மெஷின் மூலம்  பக்தர்கள்  பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் காணிக்கையை ஊக்கப்படுத்தும் விதமாக சபரிமலை கோயிலின் முக்கிய இடங்களில் ஸ்வைப்பிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இனி கையில் பணம் இல்லை என்றாலும் தங்களது வங்கி அட்டைகள் மூலம் சபரிமலைக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்தலாம். பணம் நேரடியாக கோவிலின் தனிப்பட்ட வங்கி கணக்கிறகு சென்றுவிடும் என கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேவஸ்தான வாரியத் தலைவர் பத்மகுமார், இந்த டிஜிட்டல் உலகத்தில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் பணம் செலுத்தும் முறை என்பது பக்தர்களுக்கு பயனுள்ளதாகவும், எளிமையானதாகவும் இருக்கும். பக்தர்கள் அவர்களின் பெயரில் பணத்தை செலுத்துவதால் இன்னும் திருப்தி அடைவார்கள். இந்த புதிய நடைமுறை குறித்து பக்தர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு முக்கிய இடங்களில் பதாகைகள் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

டிஜிட்டம் முறை காணிக்கை குறித்து பேசிய வங்கி அதிகாரி ஒருவர், சபரிமலை உச்சியில் முக்கிய 5 இடங்களில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் பணம் செலுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்று தெரிவித்தார்.

டிஜிட்டம் காணிக்கை முறையால் பணம் எண்ணுவதும் எளிதாகும் என தேவஸ்தான அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கூறிய அவர்கள், ஒவ்வொரு முறையும் சபரிமலை காணிக்கைகளை எண்ணுவதில் நிறைய சிரமங்கள் இருப்பதாகவும், புதிய டிஜிட்டல் முறை காணிக்கை சிரமத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்று தெரிவித்தனர்

கடந்த முறை சபரிமலை உண்டியலை திறந்த போது 'சபரிமலையை காப்பாற்றுங்கள்’ என்று எழுதப்பட்ட துண்டு காகிதங்களே அதிக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கவலை கொண்ட தேவஸ்தானம் பக்தர்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் 'சபரிமலை பாதுகாப்பாக உள்ளது' என்ற விளம்பரத்தை கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.